menu-icon menu-icon
கண்ணோட்டம்

புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே. அவனைப் புகழ்ந்து, அவனிடமே உதவி தேடி, அவனிடமே பாவமன்னிப்பும் கோருகின்றோம். எம் உள்ளத்தாலும், செயற்பாடுகளாலும் ஏற்படும் மோசமானவைகளை விட்டும் அவனிடமே பாதுகாவல் தேடுகின்றோம். அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவரை யாராலும் வழிகெடுத்திட முடியாது. யாரை வழிகேட்டில் விடுகிறானோ அவரை நேர்வழியில் செலுத்திடவும் முடியாது.

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லையென்றும், அவன் தனித்தவன், அவனுக்கு இணையாக யாரும் இல்லையெனவும் நான் சாட்சி கூறுகிறேன். அல்லாஹ் கூறுகிறான் : "அவன்தான் எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும் படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான்; அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்"

(அல்குர்ஆன் 62: 02)
 

அவ்வாறே தனது தூதுத்துவத்தின் மூலம் அல்லாஹ்வால் மக்களுக்கான அருட்கொடையாக அனுப்பப்பட்ட முஹம்மத்  அவர்கள் அவனின் அடியானும், தூதருமாவார்கள் எனவும் சாட்சி கூறுகிறேன். அல்லாஹ் கூறுகிறான் : “நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்; அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு ரஸூலை(தூதரை) அனுப்பி வைத்தான்; அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார்; இன்னும் அவர்களைப் (பாவத்தைவிட்டும்) பரிசுத்தமாக்குகிறார்; மேலும் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார் - அவர்களோ நிச்சயமாக இதற்கு முன் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருந்தனர்”

(அல்குர்ஆன் 03:164)
 

மக்களை நேர்வழிப்படுத்தவும், இருளிலிருந்து வெளிச்சத்தின் பால் அவர்களை திசைதிருப்பிடவும், வழிகேட்டிலிருந்து நேரான வழியின் பக்கம் அவர்களை மீட்டிடவுமே முஹம்மத்  அவர்களை ஹுதா, தீனுல் ஹக் எனும் இரு விடயங்களைக் கொடுத்து அல்லாஹ் அனுப்பினான். ஹுதா (நேர்வழி) என்பது பயனுள்ள கல்வியையும், தீனுல் ஹக் (யதார்த்தமான மார்க்கம்) என்பது நல்ல செயற்பாடுகளையும் குறித்து நிற்கிறது. மன அமைதிக்கும், உள்ளத்தின் ஊசலாட்டங்களை இல்லாமல் செய்வதற்கும் பெரும் உதவியாக இருக்கும் இவ்விரண்டுமே சிறந்த வாழ்வின் இரு அளவுகோல்களாக இருக்கின்றன

"மக்களுக்குத் தேவையான நம்பிக்கைசார் அம்சங்கள், வணக்க வழிபாடுகள், அன்றாட கொடுக்கல் வாங்கல்கள், நற்பண்புகள் போன்ற அனைத்தையும் அல்குர்ஆன் தன்னகத்தே பொதிந்துள்ளது. இதில் இடம்பெற்றுள்ள சுருக்கமான விடயங்களை மிகவும் தெளிவாகவும், துள்ளியமாகவும் நபியவர்களின் ஸுன்னா எமக்கு வழங்குகிறது. நபி  அவர்கள் கூறினார்கள், அறிந்துகொள்ளுங்கள் நான் அல்குர்ஆனையும் அதே போல் ஒன்றையும் பெற்றுக்கொண்டுள்ளேன்."

(அபு தாவூத் தொடர்புடையது)
 

இஸ்லாமிய நம்பிக்கை சார் அம்சங்களே (அல்அகீதா அல் இஸ்லாமிய்யா) இம்மார்க்கத்தின அடிப்படைத் தூண்களாக இருக்கின்றன. இவற்றுக்கென தனிச் சிறப்பம்சங்களும் இருக்கின்றன. அவை வருமாறு:

i. வணக்கத்தில் அல்லாஹ்வை மாத்திரமும், பின்பற்றுவதில் நபி  அவர்களை மாத்திரமும் ஒருமைப்படுத்திட வேண்டும் என வலியுறுத்துகிறது.

ii. இவை இறைவனிடமிருந்து வந்த செய்தி என்பதால் அல்குர்ஆன், ஸுன்னாவிற்கு அப்பாற்பட்ட மனித கையூடல்களும், சுய கருத்துக்களும், ஒப்புவமையும் இல்லாத, வஹிய�ோடு மாத்திரம் நிறுத்தப்பட்ட செய்தியாக இருக்கின்றன

iii. ஷைத்தானின் தீண்டுதலில் சிக்காத மனிதனின் இயல்பு நிலைக்கு ஒத்துப்போகும் வகையில் இவை அமைந்துள்ளன.

iv. மனோ இச்சைகளும், சந்தேகங்களும் அற்ற சீரான அறிவுடன் இவை ஒத்துப்போகின்றன.

v. இப் பிரபஞ்சம், அதிலுள்ள படைப்புக்கள், மனித வாழ்வு போன்ற சகல துறைகளையும் நுணுக்கமாகத் தெளிவுபடுத்தும் பூரணத்துவத்தை இவை கொண்டுள்ளன.

vi. அல்குர்ஆனிலும், ஸுன்னாவிலும் கையாளப்பட்டுள்ள சொற்கள் எவ்வித முரண்பாடுளும், ஏற்றத்தாழ்வுகளும் இன்றி ஒன்று இன்னொன்றை உண்மைப்படுத்தும் வகையிலான ஓர் ஒற்றுமை இவற்றில் காணப்படுகிறது.

vii. இதன் அனைத்துக் கூற்றுக்களிலும் எவ்வித கூடுதல், குறைவுகளும் அற்ற ஓர் நடுநிலையை எப்போதும் பேணி வருகிறது.

இவ்வாறான சிறப்பம்சங்கள் மூலம் எமக்கு பல பயன்கள் கிடைக்கின்றன. அவை வருமாறு:

i. படைப்பினங்களுக்கு அடிமைப்படாமல் படைத்தவனின் அடிமை என்பதை உறுதிப்படுத்தல்.

ii. நூதனங்களையும், அதனைப் பின்பற்றுபவர்களையும் தவிர்த்து அல்லாஹ்வின் தூதரது வழிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்தல்.

iii. அனைத்தையும் படைத்து, தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள அல்லாஹ்வுடனான உண்மையான தொடர்பு ஏற்படும் போது மன அமைதியும், நிம்மதியும் கிடைக்கப்பெறல்.

iv. பகுத்தறிவைப் பயன்படுத்தி, அதன் மூலம் மூடநம்பிக்கைகள், முரண்பாடுகள் போன்றவற்றை விட்டும் ஒதுங்கியிருத்தல்.

v. உள, உடல் தேவைகளைப் பூர்த்தி செய்து, தான் கொண்டுள்ள நம்பிக்கையிலும், தான் செல்ல வேண்டிய நேரான பாதையிலும் சீராக செல்லல்.

இன்று வரை இஸ்லாமிய அறிஞர்கள் நம்பிக்கை சார் அம்சங்களில் அதிக கவனத்தை செலுத்துகின்றனர். அவற்றைக் கற்பதிலும், அவை சம்பந்தப்பட்ட புத்தகங்களை எழுதுவதிலும், முன்னர் எழுதப்பட்ட நூல்களுக்கு விளக்கங்களை வழங்குவதிலும், கொள்கையினால் வழிகெட்டுப் போன பிரிவினருடன் விவாதங்கள் மேற்கொள்வதிலும், அவர்களுக்கான தக்க பதில்களை வழங்குவதிலும் தமது அர்ப்பணிப்புடனான சேவையை முன்னெடுத்து வருகின்றனர்.

அவ்வாறே நானும் ஆறு இஸ்லாமிய நம்பிக்கை சார் அம்சங்களையும் ஜிப்ரீல்  அவர்களின் ஹதீஸுக்கமைவாக ஒழுங்குபடுத்தி, அல்குர்ஆன், ஸுன்னாவிலிருந்து மாத்திரம் இதற்கான தகவல்களைத் திரட்டி எழுத விளைந்துள்ளேன். ஒவ்வொரு தகவல்களுக்குக் கீழாலும் அவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள அறபு சொற்களுக்கான விளக்கமும், வழிதவறிச் சென்ற குழுக்களின் விபரமும், அவர்களுக்கான தக்க பதில்களையும் பதிவிட்டுள்ளேன்.

இதற்கமைவாக இப் புத்தகத்தை மிகவும் சுருக்காமலும், அதிக விளக்கம் கொடுத்து நீளமாக்காமலும் மக்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் ஸலபுகளின் கொள்கையை நடுத்தரமாகவும் இலகு வடிவிலும் எழுதியுள்ளேன். இதற்கு “இலகு நடையில் இஸ்லாமிய கொள்கை” என்ற பெயரையும் சூட்டியுள்ளேன்.

உளத்தூய்மைய�ோடு ஆரம்பித்த எனது இச்சிறிய முயற்சியை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக. இதன் மூலம் மக்களுக்கு அதிக பயனை வழங்குவானாக.